Friday 16 August 2013

எல்.கே.ஜி. மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தொலைபேசி எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் தேடுதல் வேட்டை...

சென்னை: எல்.கே.ஜி. மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவன் மீட்பு தொடர்பான சில விவரங்கள் தொடர்ந்து மர்மமாக உள்ளது. சென்னை ஜார்ஜ் டவுன் துறைமுக அதிகாரிகள் குடியிருப்பை சேர்ந்தவர் ஹரிஹரன். எண்ணூர் துறைமுகத்தில் உதவிமேலாளராக பணியாற்றுகிறார்.மனைவி பத்மாவதி. இவர்களது ஒரே மகன் சூர்யா (4), ஆர்.ஏ.புரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் எல்கேஜி படிக்கிறான். தினமும் காலையில் சிறுவனை வேன் டிரைவர் ராஜுபள்ளியில் கொண்டு விடுவார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் சூர்யாவை விட்டு சென்ற ராஜு, காலை 11.40க்கு பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து செல்ல வந்தார். பள்ளியில் வழக்கமாக இருக்கும் இடத்தில் சூர்யா இல்லை.ஆசிரியர்களிடம் சூர்யா குறித்து விசாரித்தார் ராஜு. யாரோ ஒருவர் வந்து சூர்யாவை அழைத்து சென்றதாக அவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஹரிஹரனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் பதற்றத்துடன் வந்து பள்ளி நிர்வாகிகளிடம் விசாரித்தார். இதற்கிடையில் பள்ளியில் இருந்து போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள 16 கேமராவிலும் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு கேமராவில் மர்ம நபர் ஒருவர், சூர்யாவை அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.மதியம் ஒரு மணிக்கு ஹரிஹரனின் தொலைபேசிக்கு பேசிய மர்ம நபர், சூர்யாவை உயிரோடு பார்க்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தரவேண்டும்.

 போலீசுக்கு சென்றால் உன் மகனை கொலை செய்வோம் என்று மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்தார்.இதுகுறித்து கமிஷனர் ஜார்ஜிடம் ஹரிஹரன் புகார் தெரிவித்தார். உடனடியாக கடத்தல்காரர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஹரிஹரனுக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். செல்போனில் மிரட்டிய குற்றவாளிகள் கொருக்குப்பேட்டை பகுதியில் சுற்றுவது டவர் மூலம் தெரிந்தது. உஷாரடைந்த போலீசார் அங்கு வாகன சோதனை நடத்தினர். அப்போது கொருக்குப்பேட்டை பாலத்தில் மாலை 4.30 மணிக்கு ஒரு பைக் வந்தது. அதில் சிறுவன் சூர்யா இருந்தான். போலீசாரை பார்த்ததும், பைக்கின் பின்னால் இருந்த மர்ம நபர் தப்பினான். பைக் ஓட்டி வந்த ஆசாமியை பிடித்து சூர்யாவை மீட்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் பெயர் பிரபு (30). வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார் டிரைவர் என்பது தெரிந்தது. அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:சேலத்தை சேர்ந்த கதிரவன் என்பவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்ப்ராய்டரிங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நிறுவன உரிமையாளர் விஷாலுடன் நண்பரானார்.

வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டையை சேர்ந்த 3 பேர் என்று 6 பேர் நண்பர்களாக இருந்தோம். பணக்காரனாக வாழ வேண்டும் என்று நாங்கள் அடிக்கடி பேசுவோம். அதற்கு மாணவனை கடத்தி பணம் பறிக்கலாம் என்று நண்பர்கள் கூறி வந்தனர். என் நண்பர்தான் சிறுவனின் வீட்டில் ஏற்கனவே டிரைவராக வேலை பார்த்தார். அவர் சூர்யாவை பள்ளிக்கு அழைத்து சென்று வருவார். அதனால் சூர்யாவை எனக்கு தெரியும்.அவனை கடத்த திட்டம் போட்டோம். நானும் கதிரவனும் பைக்கில் பள்ளிக்கு சென்றோம். அங்கு சூர்யாவை பெயர் சொல்லி அழைத்தேன். அவனும் வந்து விட்டான். கதிரவன் பைக்கில் ஏறி வண்ணாரப்பேட்டை வந்தோம். அங்கு பைக்கிலேயே மாணவனுடன் சுற்றினோம். மற்ற நண்பர்கள் 4 பேர், வேறு 2 பைக்குகளில் தனித்தனியாக பிரிந்து சூர்யாவின் அப்பாவிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் தருவதாக சொன்னதால் பைக்கிலேயே சுற்றிக் கொண்டிருந்தோம்.

 பணம் கிடைத்தவுடன் சூர்யாவை வீட்டுக்கு அருகில் விட்டு விட முடிவு செய்தோம். அதற்குள் போலீசில் சிக்கி கொண்டேன். இவ்வாறு வாக்குமூலத்தில் பிரபு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து கதிரவன் மற்றும் எம்ப்ராய்டரிங் நிறுவன உரிமையாளர் விஷால் உள்பட மற்றவர்க¬ போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவே கதிரவன் சேலம் தப்பி சென்றுள்ளார். தனிப்படை போலீசார் சேலம் விரைந்து சென்று அவரை நேற்று காலை கைது செய்தனர். மேலும் வண்ணாரப்பேட்டையில் விஷாலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வெளிநாடு வாழ் இந்தியரின் வங்கி கணக்கில் 70 லட்சம் மோசடி

கோவை: கோவை பீளமேடு பி.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் மோகன் (57). தற்போது இவர் வெளிநாடு வாழ் இந்தியராக உள்ளார். இவர் ஜப்பான் யோகோகாம பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு துவங்கியுள்ளார்.
தனது வங்கி கணக்கில்  10 தவணைகளில் 3 கோடியே 93லட்சம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சுப்ரமணியம் மோகன் கோவை வந்துள்ளார். இவரும், இவரது மனைவியும் வங்கிக்கு சென்று பார்த்தபோது, வங்கிகணக்கில் ரூ. 70லட்சம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 கணக்கை பரிசோதித்த போது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பண பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் சீனாவில் உள்ள வங்கியில் 60 லட்சம், டெல்லியில் உள்ள வங்கியில் 5 லட்சம், பரிதாபாத்தில் உள்ள வங்கியில் ரூ.5 லட்சம் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து வங்கியின் முதன்மை அதிகாரியிடம் சுப்ரமணியம் மோகன் விசாரித்தபோது அதிகாரிகள் தெரியவில்லை என பதில் கூறியுள்ளனர். இதையடுத்து சுப்ரமணியம் மோகன் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதனியிடம் புகார் அளித்தார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் சரவணா தேவேந்திரன் தலைமையில் வழக்கை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்து. சைபர் கிரைம் போலீசார் சுப்ரமணியம் மோகனுக்கு தெரிந்தவர் யாரோ வங்கி கணக்கில் உள்ள மின்னஞ்சலின் கடவுச்சொல்லை பயன்படுத்தி பணபரிமாற்றம் செய்திருக்கலாம் அல்லது வங்கியில் ஏதாவது மோசடி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, தகவல் தொழில்நுட்ப மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Friday 9 August 2013

குற்றங்களும்,வன்மங்கள் நிறைந்த முகம் தெரியாத மனிதர்கள் நிறைந்துள்ள இணைய வெளி.....

இரண்டு இரு வாரங்களுக்கு முன் இரவு 11 மணியளவில் என் கைப்பேசி கதறியது,கதறியது கைப்பேசி மட்டுள்ள அழைத்த ஒரு தாயும் கூட தன் மகனை பள்ளியில் படிக்கும் சக மாணவன் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறினார்,எனக்கு அந்த தாயை ஆசுவாசப்படுத்தி அவருக்கு வேண்டிய உதவிகளை உடனே மேற்கொள்வதாக கூறி,அவர் மகன் படிக்கும் பள்ளி,வகுப்பு மற்றும் வயது போன்ற விவரங்களை கேட்டேன்,என் இதயமே சிறிது நேரம் ஸ்தம்பித்து போனது, பாதிக்கப்பட்ட சிறுவனின் வயது ஏழு,படிப்பது இரண்டாம் வகுப்பு, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அந்த
மாணவனும் அதே வகுப்பை சார்ந்தவன்,சம வயது சிறுவன். நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு அந்த தாயை நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை அப்படியே நடந்த இருந்தால் தயவு செய்து இந்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்லி கொண்டு இருக்காதீர்கள், பள்ளியின் கவனத்திற்கு கொண்டு சென்றீர்களா என்றேன்,இல்லை சம்பத்தப்பட்ட மாணவனின் பெற்றோரிடம் விசாரித்தோம்,அவர்களை அதை ஒத்து கொள்ளவில்லை எங்களிடம் சண்டைக்கு வருகிறார்கள் என்று கூறினார்.சம்பவம் நடந்தது என உங்கள் மகன் கூறுவது பள்ளியின் வகுப்பறையிலும், கழிவறையிலும் தான் எனவே பள்ளியின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்போம் நாளை பள்ளிக்கு செல்லாம் என்று கைப்பேசி இணைப்பை துண்டித்தேன்.

அன்றிறவு எனக்கு தூக்கம் போனது இப்பொழுது என் கவலை இரு மடங்காகியது காரணம் பாலியல் ரீதீயாக பாதிக்கப்பட்ட சிறுவனை விட நான் அதிகமாக கவலைப்பட்டது பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அந்த சிறுவனை நிலை தான், அந்த சிறுவனின் வாழ்க்கை முறை முற்றிலும் பாழாகிவிடும்.

மறுநாள். காலை அந்த பள்ளிக்கு சென்று பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் எங்களை அறிமுகப்படுத்தி கொண்டு விவரத்தை கூறினோம் அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே ,வகுப்பு ஆசிரியை அழைத்து விசாரித்தனர்,ஒரிரு மாணவர்கள் குறிப்பிட்ட மாணவன் பென்சிலால் குத்துகிறான் அடிக்கிறான் என புகார் வரும்,அப்பொழுது எல்லாம் அழைத்து கண்டிப்பேன்.இந்த மாதிரியான புகார்கள் வரவில்லை,என கூறினார்.சிறு பிள்ளைகள் ஏதோ அடிக்கு பயந்து சொல்லாமல் இருந்து இருக்கலாம் என கூறினார். நாங்கள் மாணவனை காண விரும்பி வகுப்பறைக்கு பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர் போல் சென்று
சில மாணவர்களிடம் பேசி விட்டு அவனிடம் வந்து பேச்சு கொடுத்தோம்,என்னவென்று சொல்வது அந்த குழந்தையின் பேச்சில் இன்னும் மழலை கூட மாறவில்லை, அவன் சுட்டித்தனம்,சிரிப்பு,அறிவாற்றல்,அனைத்தும் கண்டு வியந்தோம்,இந்த தவறை இவன் ஒருக்காலும் செய்திருக்க மாட்டான் என தோன்றியது அதற்காக அந்த பாதிக்கப்பட்ட குழந்தையும் பொய் சொல்கிறது என ஒதுக்கி விட முடியவில்லை திடிரென அவன் என்னுடன் வந்த தமிழ்நாடு சைபர் கிரைம் விழுப்புனர்ச்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஒருவரின் கைப்பேசியை (SAMSUNG GALAXY) கேட்டான்,இதை உபயோகப்படுத்த தெரியுமா உனக்கு என்றார் அவர், எங்க அப்பா இந்த மொபைல் தான் வைத்துள்ளார்,அதில் கேம்ஸ், எல்லாம் போடுவார்,காரில் போகும் போது நான் தொந்தரவு செய்ய கூடாது மொபைலில் படம் போட்டு தருவார்  என கூறினான், தவறின் ஆரம்ப முனை தெரிய வந்தது, எதற்கும் நடப்பது உண்மை தானா என கண்டறிய ஒரே வழி வகுப்பாசிரியர் தான்,அவரை தனியே அழைத்து அவன் மீது இந்த புகாரின் அடிப்படையில் வன்மம் காட்டாமல்,அவன் நடவடிக்கை மீது சிறு கவனம் செலுத்துங்கள்,ஏதேனும் விஷயம் அறிந்தால் தகவல் கூறுங்கள் என கிளம்பினோம்.

இரு தினங்கள் கழித்து பள்ளி தாளாளரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.வரும் பொழுது உங்கள் அமைப்பில் பெண் அமைப்பாளர்கள் இருந்தால் அழைத்து வரவும் என கூறினார்.நாங்கள் அவ்வாறே அழைத்து சென்றோம்,அந்த வகுப்பாசிரியை எங்கள் பெண் அமைப்பாளரிடம் புகார் கூறிய பையனின் கூற்று உண்மை தான் கழிவறையிலும்,மதிய இடைவேளை நேரத்தில் வகுப்பறையிலும் அவன் இம்மாதிரியான காரியங்களில் ஈடுப்படுகிறான், மறுக்கும் மாணவர்களை பெனிசிலால் குத்தி
துன்புறுத்திகிறான் என கூறினார்,மேலும் அவன் இம்மாதிரியான செயல்களை,அவன் வீட்டிலோ,உறவினர் வீட்டிலோ அல்லது அக்கம் பக்கம் வீட்டிலோ, பார்த்துள்ளான் அவன் இந்த செயலில் ஈடுபடும் பொழுது அவன் சிறு பிள்ளை போல் நடந்து கொள்ளவில்லை எனவும் கூறினார். இனி இந்த பிரச்சனையை பெற்றோரின் துணை கொண்டு தான் திர்வு காண வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கூறி விட்டு அந்த குழந்தையை தனிமை படுத்த வேண்டாம்,கழிவறைக்கு செல்லும் பொழுது அவனுடன் மூன்று நான்கு சிறுவர்களை அனுப்பி வைக்கவும்,மதிய இடைவேளை நேரத்தில் யாரொ ஒரு ஆசிரியர் வகுப்பறையில் இருக்குமாறு கேட்டு கொண்டு,அச்சிறுவனின் பெற்றோர் நடந்தவற்றை கூறி குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைய தீர்வு காண சென்றோம். மிக வளமிக்க சூழ்நிலையில் தான் அந்த குழந்தை வளர்கிறான் என்பதை அவர்கள் குடியிருக்கும் இடம் எளிதில் காட்டியது. அவன் பெற்றோரிடம் எங்களை அறிமுகப்படுத்தி கொண்டு விஷயத்தை கூறினோம்,எடுத்த எடுப்பில் அவன் தந்தை தனக்கு அமைச்சைரை தெரியும் என்னிடம் இந்த வேலையெல்லாம் வேண்டாம் என கூறி எங்களை வெளியே அனுப்பி விட்டார்.

வெளியேறியது நாங்கள் தான் ஆனால் பாதிக்கபடுவது அவர் குழந்தை என்பதை அவர் அறியவில்லை.அறியாமையில் இருப்பது அந்த குழந்தை என்பதை விட அந்த பெற்றோர்கள தான் இந்த மாதிரி ஒன்று இரண்டு இல்லை லட்ச கணக்காணோர் தங்கள் குழந்தைகளின் அன்றாட நிகழ்வுகளை கவனிப்பதில்லை,கணினி மற்றும் கைப்பேசியில் முறையான பாதுகாப்பு முறைகளை கையாளமல் விளையாட கொடுப்பது.அப்படி விளையாடும் பொழுது அந்த குழந்தைகளின் அருகில் இருப்பது இல்லை,அக்கம் பக்கத்து வீட்டில் விளையாட பொழுது,யாருடன் விளையாடுகிறார்கள் என பார்ப்பதில்லை.

இந்த குழந்தையின் விஷயத்தில் என்ன நடந்திருக்க கூடும்


  • ·பெற்றோர் அல்லது உறவினர்களின் கைப்பேசி அல்லது கணினியில் பாலுணர்ச்சியை தூண்டும் திரைப்படங்கள் அல்லது புகைப்படங்களை வைத்திருந்திருக்கலாம் அதை அந்த சிறுவன் பார்த்து அதை விளையாட்டாக அரம்பித்து இருக்கலாம்.
  • ·         கணினியில் இணைய தளங்களை பார்க்கும் பொழுது பாலுணர்ச்சியை தூண்டும் அம்மாதிரியான் புகைப்படங்கள் தோன்றி இருக்கலாம். 
  • ·         தன் வீட்டில்,உறவினர் வீட்டில் அல்லது அக்கம் பக்கத்து வீட்டில் இந்த மாதிரியான செயலகளை கண்டு இருக்கலாம்.

·         யூனிசேவின் அறிக்கையின்படி உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் 1.2 கோடி ஆண்கள், இளம் குழந்தைகளைப் பாலியல் ரீதியாக அணுகுகின்றனர் அப்படி கூட இந்த குழந்தையை உறவினர்களோ,நன்பர்களோ அனுகி இருக்கலாம்.தனக்கு பிடித்த சந்தோஷமான விஷயத்தை தன் நன்பர்களிடம் பகிர்ந்து கொள்வது இயல்பு தானே, நல்லது கெட்டது பகுத்தாயும் வயதில்லை அது. 

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

  • உங்கள் கைப்பேசியில் தவறான புகைப்படங்கள்,திரைப்படங்கள்,பதிவிறக்கம் செய்யாதீர்கள்
  •  கைப்பேசி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம்,அந்த வகையில் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
  • கைப்பேசி விளையாட்டு சாதனமோ அல்லது நம் கௌரவத்தின் அடையாளமோ அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள்
  •   உங்கள் வயது வந்த பெண் மற்றும் ஆண் பிள்ளைகளின் கைப்பேசிகள் அவர்கள் தூங்கிய பின்பு அவர்களுக்கு தெரியாமல் ஆய்வு செய்து பாருங்கள்,தவறொன்றும் இல்லை,அது உங்கள் கடமை, நாகரீகம் என்ற பெயரால் உங்களையும் ஏமாற்றி,பிள்ளகளின் வாழ்க்கை பாழ்ப்படுத்தி விடாதீர்கள்   
  •  அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள், மிக அருமையானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் அவரகளிடம் சொல்லி கொண்டே இருங்கள்.
  •  பள்ளியில்,கல்லூரியில்,ன நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் அசௌகரியம் ஏதும் இருந்தால் எல்லாவற்றையும் உங்களிடம் தெரிவிக்கக் சொல்லுங்கள் .
  • குழந்தைகள்ெற்றோரின் மீது நம்பிக்கை வைத்து நடந்த சம்பவத்தைப் பற்றி பேச வேண்டும்,அதற்க்கான ஆதரவை பெற்றோர் நமக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் குழந்தைகளிடம் நாம் அளிக்கவேண்டும்.
செய்தி தாள் வாசிப்பு குறைந்து,இருபத்தினான்கு மணி நேரமும், தொலக்காட்சி தொடர்களின் கோர பிடியில் சிக்கியுள்ள தாய்மார்களூக்கும்,பணம் சம்பாதித்து வீட்டிற்க்கு தேவையான வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்து விட்டால் நம் கடமை முடிந்து விட்டது என நினைக்கும் குடும்ப தலைவர்களுக்கும் தமிழ் நாடு சைபர் குற்ற விழிப்புனர்ச்சி அமைப்பின் சார்ப்பாக ஒரு பணிவான வேண்டுகோள்,இளைய சமுதாயத்தின் எதிர்க்காலம் குற்றங்களும்,வன்மங்கள் நிறைந்த முகம் தெரியாத மனிதர்கள்  நிறைந்துள்ள இணைய வெளியில் சிக்கி உள்ளது,அதை பாதுகாக்கும் தலையாய கடமை நமதாகும் ,தயவு செய்து அலட்சியமாக இருக்க வேண்டாம்.நம் கவன குறைவே பிள்ளைகளுக்கு ஆபத்தாக முடிக்கிறது நினைவில் கொள்ளவும்

நன்றி
பக்தீஸ்வரன் சிவலிங்கம்
.